ஒரு குடும்பம் என்பது
குழந்தைகளுக்கான பொருளியலடிப்படையை உருவாக்கி அளிப்பது மட்டுமல்ல. குழந்தைகளுக்கான
பண்பாட்டுவெளியை அளிப்பதும்கூடத்தான். அதைப் ‘புகட்ட’ முடியாது. அதை வாழ்க்கையாகக்
கொண்டிருந்தால்தான் குழந்தைகளுக்குச் சென்றுசேரும். உலகியல் லாபத்துக்காக மட்டும்
‘சாமி கும்பிட்டு’விட்டு இந்து மெய்யியல் பற்றி ஒன்றுமே தெரியாமலிருக்கும் ஒரு
மண்ணாந்தைக் குடும்பத் தலைவர் தன் குழந்தைகளின் பண்பாடு பற்றிப் பேசும் தகுதி
கொண்டவரா என்ன?
வீட்டில்
இருந்து பண்பாடும் மதமும் கற்பிக்கப்படவேண்டும். இயல்பாக, வாழ்க்கைமுறையாக.
கண்மூடித்தனமான பழமைவாதமாக அல்ல, ஒவ்வாதன விலக்கப்பட்டு, இன்றைய
காலத்திற்குரியவையாக. பண்பாட்டிலிருந்து கலையும் இலக்கியமும் அவற்றின் சாரமான
நுண்படிமங்களும் வழ்ந்து சேரவேண்டும். மதத்தில் இருந்து ஆன்மிகம்
வந்துசேரவேண்டும்.
அவை
ஏன் குடும்பத்தில் இருந்து வரவேண்டும் என்றால் அவை ‘அறிவு’ அல்ல ‘உணர்வுகள்’.
ஆழ்படிமங்கள் வழியாகச் செயல்படுபவை அவை. இளமையிலேயே அகத்தே கடந்து உள்ளே
வளரவேண்டியவை. ஆன்மிகம் என்பதன் அடிப்படைகளே அவைதான். அவை
விளக்கங்களுக்கு ஒருவகையில் அப்பாற்பட்டவை. மதம் வழியாக அவை வரலாம். அல்லது மதம்
கடந்த ஆன்மிகம் வழியாக வரலாம். மதம் வழியாக சங்கரரும் திருமூலரும் வரலாம், மதம்
கடந்த ஆன்மிகம் வழியாக ஷோப்பனோவரும் குரோச்சேயும் வரலாம்.
No comments:
Post a Comment