Friday, October 18, 2024

பண்பாட்டுவெளி

 

ஒரு குடும்பம் என்பது குழந்தைகளுக்கான பொருளியலடிப்படையை உருவாக்கி அளிப்பது மட்டுமல்ல. குழந்தைகளுக்கான பண்பாட்டுவெளியை அளிப்பதும்கூடத்தான். அதைப் ‘புகட்ட’ முடியாது. அதை வாழ்க்கையாகக் கொண்டிருந்தால்தான் குழந்தைகளுக்குச் சென்றுசேரும். உலகியல் லாபத்துக்காக மட்டும் ‘சாமி கும்பிட்டு’விட்டு இந்து மெய்யியல் பற்றி ஒன்றுமே தெரியாமலிருக்கும் ஒரு மண்ணாந்தைக் குடும்பத் தலைவர் தன் குழந்தைகளின் பண்பாடு பற்றிப் பேசும் தகுதி கொண்டவரா என்ன?

வீட்டில் இருந்து பண்பாடும் மதமும் கற்பிக்கப்படவேண்டும். இயல்பாக, வாழ்க்கைமுறையாக. கண்மூடித்தனமான பழமைவாதமாக அல்ல, ஒவ்வாதன விலக்கப்பட்டு, இன்றைய காலத்திற்குரியவையாக. பண்பாட்டிலிருந்து கலையும் இலக்கியமும் அவற்றின் சாரமான நுண்படிமங்களும் வழ்ந்து சேரவேண்டும். மதத்தில் இருந்து ஆன்மிகம் வந்துசேரவேண்டும்.

அவை ஏன் குடும்பத்தில் இருந்து வரவேண்டும் என்றால் அவை ‘அறிவு’ அல்ல ‘உணர்வுகள்’. ஆழ்படிமங்கள் வழியாகச் செயல்படுபவை அவை. இளமையிலேயே அகத்தே கடந்து உள்ளே வளரவேண்டியவை. ஆன்மிகம் என்பதன் அடிப்படைகளே அவைதான்.  அவை விளக்கங்களுக்கு ஒருவகையில் அப்பாற்பட்டவை. மதம் வழியாக அவை வரலாம். அல்லது மதம் கடந்த ஆன்மிகம் வழியாக வரலாம். மதம் வழியாக சங்கரரும் திருமூலரும் வரலாம், மதம் கடந்த ஆன்மிகம் வழியாக ஷோப்பனோவரும் குரோச்சேயும் வரலாம்.

அறம், பொருள், இன்பம்

 

 

நேற்றைய சமூகம் அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு விழுப்பொருட்களை நமக்கு அளித்தது. [தர்ம, அர்த்த, காம, மோட்சம்] அறம் என்பது நம் சமூகத்துடனும், இயற்கையுடனும், இங்கு நிகழும் வாழ்வுடனும் இசைந்து போதல். அவற்றின் இயல்பான கூறாக இருத்தல். அந்நிலையில் நாம் ஆற்றவேண்டியவற்றை ஆற்றுதல்.  அவற்றின் நெறிகளே அறம். அவற்றை அறிந்து இயைந்து ஒழுகுபவனே உண்மையாக வாழ்பவன். பொருள் என்பது அந்த அறத்தின் எல்லைக்குள் நின்றபடி இவ்வுலகில் ஈட்டிக்கொள்ளும் உலகியல் நன்மைகள்ளான அதிகாரம், செல்வம், போகம் போன்றவை. காமம் என்பது நாமே நமக்கென அடையும் அக இன்பங்கள். ஒரு கட்டத்தில் இம்மூன்றையும் விட்டுவிட்டு நாம் அடையும் முழுமையே வீடு.

இன்று அர்த்தமும் காமமும் மட்டுமே விழுப்பொருள் என இச்சமூகம் நமக்குக் கற்பிக்கிறது. உண்மையில் பொருள் ஒன்றே விழுப்பொருள் எனச் சொல்லித்தருகிறது. காமம் என்பது அதன் வழியாக நாம் அடையும் லாபம். இதை நாம் நம் குழந்தைகளுக்கு அளிக்கிறோம். மிக இளமையிலேயே அவர்களுக்கு உலகியல் இலக்குகளை அளித்துவிடுகிறோம். அவர்கள் தங்கள் இயல்பென்ன, தங்கள் ருசிகள் என்னென்ன, தங்கள் திறன்கள் என்ன என்று அறிவதற்குள்ளாகவே அந்த இலக்குகள் அவர்களுக்குரியவையாக வகுக்கப்பட்டுவிடுகின்றன. அவர்கள் அதற்காக மிகமிகக் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். அவர்களின் இளமைப்பருவமே அதற்காகச் செலவிடப்படுகிறது. அவர்களுக்கு இளமையின் கொண்டாட்டங்களே இல்லை. அவர்கள் வாழ்வதே இல்லை. அவர்கள் போட்டியில் ஓடிக்கொண்டே இளமையைக் கடந்துவருகிறார்கள்.

இங்கே ஒன்றைச் சொல்லவேண்டும். இலட்சியம் வேறு, இலக்கு வேறு. இலட்சியம் என்பது ஒருவன் தன் இயல்பென்ன என அறிந்து, அதற்கேற்ப கண்டடையும் ஒரு செல்வழி. சென்றடையும் இடம் அதில் ஏற்கனவே வகுக்கப்பட்டிருப்பதில்லை. செல்லும் திசை மட்டுமே அவனால் கண்டடையப்படுகிறது. அவன் மேம்படுத்திக்கொண்டபடியே சென்று ஓர் நிறைவுப்புள்ளியை அடையலாம். ஆனால் அது மெய்யான இலட்சியம் என்றால் செல்லும் வழியில் ஒவ்வொரு இடத்திலும் அவன் அதற்குரிய நிறைவை, வெற்றியை அடைந்துகொண்டேதான் இருக்கிறான். ஆகவே ஒவ்வொருநாளும் அது மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். அதில் ஏமாற்றமே இல்லை. எங்கே சென்று நின்றாலும் அதுவே அவனுக்கான உச்சப்புள்ளி. இலட்சியவாதம் என்பது அந்தப்பயணம்தான்.

ஆனால் இலக்கு என்பது ஓர் உலகியல் சார்ந்த இடம் அல்லது பெறுபொருள். அதை அடையாவிட்டால் அதுவரையிலான பயணமே வீண்தான். வாழ்க்கையில் இலக்கு கொண்டவர் வேறு, இலட்சியவாதி வேறு. இலட்சியவாதிக்கு சோர்வுக்கணங்கள் இருக்கலாம், வெறுமையுணர்வு இருக்காது. இலக்கு கொண்டவர்கள் எய்தாவிட்டால் வெறுமையை அடையவேண்டியிருக்கும். எய்தினாலும் தற்காலிக நிறைவுக்குப்பின் அடுத்த இலக்கு தேவைப்படும்.

அவர்களை ‘இலக்கு கொண்டவர்கள் ஆனால் இலட்சியவாதம் என்பதையே அறியாதவர்கள்’ என அடுத்தபடியாக வரையறைசெய்வேன். ஆகவே அவர்களுக்குச் செயல் என்பதிலுள்ள நிறைவும் மகிழ்வும் தெரிந்திருப்பதே இல்லை. அவர்கள் எப்போதுமே பதறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இளமையிலேயே பெரிய இலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்கள் அந்த இலக்கை தவறவிட்டதைப் பற்றி வருத்ததுடன் சொல்கிறார்கள். ஐஐடி படிப்பு, மருத்துவப்படிப்பு இப்படி எதையாவது. மிகப்பெரும்பான்மையினர் தங்கள் வாழ்க்கை எப்போதைக்குமாக பாழாகிவிட்டது என்னும் மனநிலையிலேயே இருக்கிறார்கள். ஆட்சிப்பணித் தேர்வில் தோல்வியடைந்த சிலரை எனக்கு தெரியும். அரசுப்பணியில் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் தங்கள் வாழ்க்கை ஒரு பெருந்தோல்வி என்னும் எண்ணத்திலேயே நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். பேச ஆரம்பித்தாலே அதைத்தான் சொல்வார்கள்.

 

இலக்கு ஒன்றுக்காகவே வாழ்க்கையைச் செலவிடுபவர்கள் தங்கள் இயல்பென்ன, சுவை என்ன என்று கண்டுகொள்வதில்லை. ஆகவே தங்களை மகிழ்விக்கும் எதையுமே அவர்கள் அறிந்திருப்பதில்லை. தங்களுக்குரிய அகப்பயணம் எதுவுமே அற்றவர்களாக இருப்பார்கள். அத்துடன் கற்பதன் இன்பம் இல்லாத ஒரு தளத்தில் நீண்டநாட்கள் முழு மூளையையும் செலவிடுபவர்களுக்கு நரம்புரீதியாகவே கூட ஏதாவது பாதிப்புகள் இருக்கலாமென எனக்கு தோன்றுகிறது. ஆகவே அவர்கள் மிக இயல்பாக உளச்சோர்வுக்குச் செல்கிறார்கள்.

 

இன்றைய உலகில் உளச்சோர்வு [Hyper Depression] நோய்க்கு ஆளாகிறவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் உயர்குடியினர் மற்றும் உயர்நடுத்தர குடியினர். பெரும்பாலானவர்கள் நல்ல கல்வி பெற்று மற்றவர் பார்வையில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கென வைத்துக்கொண்ட இலக்கை அவர்கள் எட்டியிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் போட்டியாளர்களாக நினைப்பவர்கள் அவர்களை விட முந்திவிட்டதாக எண்ணிக்கொண்டிருப்பார்கள். இலக்கு ஒன்றுக்காகவே வாழ்வதனால் அவ்விலக்கு தவறுகிறது என்னும்போது வாழ்க்கை வெறுமையாகிவிட்டதாக உணர்கிறார்கள்.

 

பள்ளிநாட்களில் இலக்குகள் தேவைதான். அவை நம் முயற்சியை ஒருங்கிணைக்கும் என்பதும் உண்மைதான். இன்றைய வாழ்க்கை போட்டிமிக்கதாக இருப்பதனால் போட்டியைச் சந்திக்கும்பொருட்டு கடுமையான பயிற்சி எடுத்துக்கொள்வதையும் தேவையில்லை என்று சொல்லமாட்டேன்.வேறு வழியில்லை. ஆனால் அதன் எல்லைகளை நாம் உணர்ந்திருக்கவேண்டும், இச்சமூகம் அதை குழந்தைகளுக்குச் சொல்லவேண்டும். பெற்றோருக்கும் கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.

 

சமூகம் போட்டியை உருவாக்கி தீர்ப்பளிக்கும் இரக்கமற்ற அமைப்பாக மட்டும் நின்றுவிடலாகாது. கொஞ்சமேனும் அரவணைக்கும்தன்மையும் அதற்குத்தேவை. உலகியல் இலக்குகளே ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. உலகியல் இலக்குகளில் வென்றவர்கள் எல்லாவற்றையும் அடைந்தவர்கள் அல்ல. தவறியவர்கள் எல்லாவற்றையும் இழந்தவர்களும் அல்ல. உலகியல் இலக்குகள் உலகியல் சார்ந்தவை மட்டுமே. அவை நான்கு விழுப்பொருட்களில் ஒன்றான ‘பொருள்’ என்னும் எல்லைக்குள் மட்டுமே நிற்பவை. பொருள் மட்டுமே வாழ்க்கை அல்ல. பொருள் இவ்வுலக வாழ்க்கையை தீர்மானிப்பதில் முக்கியமான இடம் வகிக்கிறது. ஆனால் அதன் பொருட்டு மற்ற மூன்றையும் இழந்தால் பொருளாலும் பயனில்லாமல் ஆகும்.

 

பொருள் மட்டுமே வாழ்க்கை என்று தன் குடிகளுக்குக் கற்பித்தது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய- அமெரிக்கச் சமூகம். அதன் விளைவாக பொருளியல்வெற்றி பெற்ற சமூகமாக அது ஆகியது. அதன்பொருட்டு அது ஒவ்வொரு தனிமனிதரையும் பொருள்வேட்டையாடுபவராக ஆக்கியது. அவ்வேட்டையில் ஆயிரம்பேர் கலந்துகொண்டால் ஒருவரே வெல்லமுடியும் என்னும்போது எஞ்சிய அனைவருக்கும் தோல்வியின் வெறுமையையே அதனால் அளிக்கமுடியும்.  அந்த அமைப்பின் பின்விளைவே உளச்சோர்வு. உலகிலேயே அதிகமாக உளச்சோர்வு மாத்திரைகளை உண்ணும் சமூகங்கள் அவை. உளச்சோர்வு மாத்திரை உற்பத்தி உலகின் மாபெரும் வணிகமாக ஆகிவிட்டிருக்கின்றது.

 

 

 

 

Thursday, March 28, 2024